போடிநாயக்கன்பட்டி ஏரி புனரமைப்பு பணி - ஆணையர் ஆய்வு
போடிநாயக்கன்பட்டி ஏரியை புனரமைத்து அழகுபடுத்தும் பணி, சூரமங்கலம் ரெட்டியூர் மாரியம்மன் கோவிலில் இருந்து குரங்குச்சாவடி வரையிலான சாலை பணி ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் நேரில் ஆய்வு செய்தார்.;
ஆணையர் ஆய்வு
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட போடிநாயக்கன்பட்டி ஏரி புனரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் சூரமங்கலம் ரெட்டியூர் மாரியம்மன் கோவிலில் இருந்து குரங்குச்சாவடி சந்திக்கு செல்லும் வழியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:- சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி மற்றும் மூக்கனேரி ஆகிய நீர்நிலைகளில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் தற்போது 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. பழைய சூரமங்கலம் கிராமம் மற்றும் ஜே.ஜே. நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி போடிநாயக்கன்பட்டி ஏரி 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை புனரமைத்து அழகுபடுத்துவதற்கு ரூ.19 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஏரியில் சுத்தமான நீரை சேமிப்பதன் மூலம் மீன்பிடி தொழில், படகு சவாரி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்திடவும், கனமழையின் போது ஏரியில் மழைநீர் தேங்கி அதன் மூலம் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் திலகா, கவுன்சிலர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.