விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

தர்மபுரி அருகே விபத்தில் மூளை சாவடைந்த மேச்சேரி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2024-01-24 09:17 GMT

அரசு மரியாதை 

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கோவில்வெள்ளார் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் நாகராஜ் (19) ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூரில் இருந்து சொந்த ஊரான கோவில் வெள்ளார் பகுதிக்கு வந்தார். பொங்கல் பண்டிகை கொண்டாடி விட்டு கடந்த 19 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஓசூர் புறப்பட்டு சென்றார்.

அப்போது தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற நாகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நாகராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது உறவினர்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 21ம்தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை நாகராஜ் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து உயிரிழந்த நாகராஜின் உறவினர்கள் உடல் உறுப்பு தான ஒப்புதல் அளித்தனர். மருத்துவர்கள் கண் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை எடுத்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மலர்வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News