பாறை சரிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம், ஊட்டுமலை பகுதியில் தடுப்பணை ஓடையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பாறை சரிந்து விழுந்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மகன்கள் பவின், சுதீப் இவர்கள் 2 பேரும் நேற்று ஊட்டமலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தடுப்பணை ஓடையில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த பகுதியில் மண் சரிந்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த பாறை சிறுவர்கள் மீது விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கிய பவின, சுதீப் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 சிறுவர்களையும் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே பவின் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.