சிறுவன் கொலை வழக்கு - 3 நண்பர்கள் கைது, ஒருவர் தலைமறைவு.

கும்பகோணம் அருகே வயலில் சிறுவன் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Update: 2024-06-26 01:59 GMT

கொலை செய்யப்பட்ட தாமோதரன் 

கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் சரகத்திற்குட்பட்ட மேலாத்துக்குறிச்சி கிராமம், மயானக்கரை சாலையில் ரமேஷ் என்பவருடைய குத்தகை வயல் உள்ளது. இங்கு நேற்று காலை அடையாளம் தெரியாத சிறுவன் மர்மமான முறையில் முகம் மற்றும் உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை காலையில் வயலுக்கு சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்து நீலத்தநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் இளவரசனுக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இளவரசன் நேரில் வந்து பார்வையிட்டு சுவாமிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த தகவலறிந்த தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத், கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் மற்றும் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) சிவ செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் படுகொலை நடந்த வயலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கொலையான சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தஞ்சாவூர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவி கொண்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

இந்த கொலை குறித்து வழக்கு பதிந்து சுவாமிமலை போலீசார் கொலையானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ஏதேனும் முன் விரோதம் காரணமாக இருக்குமா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு கொலை செய்து தலைமறைவில் உள்ள குற்றவாளிகள் யார்? என தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான சிறுவன் கும்பகோணம் அடுத்த மூப்பகோவில் பகுதியில் வசிக்கும் ராதா என்பவர் மகன் தாமோதரன் (15) என்பதும், இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த இந்த சிறுவனை நேற்று முன்தினம் இரவு இவரது நண்பர்கள் 4 பேர் டூவீலரில் அழைத்து சென்றதும் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தாமோதரனின் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தலைமறைவாக  உள்ள மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News