வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
கோவில்பட்டியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீசார் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சீனிவாச நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன் - ரமணி தம்பதி. கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன், பொங்கல் பண்டிகைக்காக விருதுநகா் மாவட்டம் குகன்பாறையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டாா்களாம். இதே போல், இவரது வீட்டின் முதல் தளத்தில் வசிக்கும் லிங்கையா மகன் வசந்தகுமாா் என்பவரும் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவரது மாமனாா் ஊரான கடம்பூரையடுத்த இளவேலங்கால் கிராமத்துக்கு சென்று விட்டாா்களாம்.
இந்நிலையில் நேற்று காலை வசந்தகுமாா் ஊருக்கு திரும்பி வந்து பாா்த்தபோது கீழ்தளத்தில் உள்ள ரமணியின் வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்ட அவா் மேலே சென்று பாா்த்தபோது அவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னா் அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சிதறி கிடந்ததாம். மேலும் பீரோவில் இருந்த தங்க மோதிரம், தங்கச் சங்கிலி, தங்க கம்மல் என 26 கிராம் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்ததாம். அதுபோல ரமணி வீட்டில் இருந்த தங்க கம்மல் மற்றும் தங்க மோதிரம் என 6 கிராம் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து இருவரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.