ரூ.300 லஞ்சம் - முன்னாள் போலீஸ் ஏட்டுக்கு ஒராண்டு சிறை
வெள்ளிச்சந்தையில் பாஸ்போர்ட் விசாரணைக்காக ரூ.300 லஞ்சம் பெற்ற முன்னாள் போலீஸ் ஏட்டுக்கு ஒராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சொர்ணப்பன் வயது (56) இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் தலைமை போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். அப்போது முட்டம் பிள்ளைத்தோப்பு பகுதி சேர்ந்த எடிசன் என்பவர் தனது பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் 300 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி வெள்ளிச்சந்தை போலீசில் எடிசன் 300 ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சொர்ணப்பனை கையும் களவுமாக கைது செய்தனர். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் உள்ள மாவட்டம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி கோகுலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சொர்ணப்பனை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் மற்றும் 4000 ரூபாய் அபராதம் விதித்தார்.