லஞ்சம் வாங்கிய நகராட்சி கமிஷனர் - நள்ளிரவில் சிறையில் அடைப்பு
குன்றத்தூரில் வீட்டுமனை திட்ட வரைபட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய நகராட்சி ஆணையர் உட்பட 3 பேரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணைக்கு பின் அவர்களை சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் நகராட்சியில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் முனுசாமி என்பவரின் வீட்டு மனைக்கு திட்ட வரைபட அனுமதி கோரி, நகராட்சி நிர்வாகத்தை அனுகினார். அப்போது, குன்றத்துார் நகராட்சி கமிஷனர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர், 24,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனுசாமி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை முனுசாமியிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று முன்தினம் குன்றத்துார் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச பணத்தை நகராட்சி உதவியாளர் சாம்சன் பெற்ற போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு அலுவலர் பாலசுப்பிரமணி, உதவியாளர் சாம்சன் ஆகிய மூவரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் மதியம் 2:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை விசாரணை நடந்தது. பின், நள்ளிரவு 1:00 மணிக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின், நகராட்சி கமிஷனர் குமாரி புழல் சிறையிலும், நகரமைப்பு அலுவலர் பாலசுப்பிரமணி, உதவியாளர் சாம்சன் செங்கல்பட்டு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும், தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள நகராட்சி கமிஷனர் குமாரி வீட்டை நேற்று முன்தினம் சோதனை செய்து, ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்."