லஞ்ச புகார் : சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்
பழனியில் பணியாற்றிய போது எழுந்த லஞ்ச புகாரில் குற்றம்சாட்டப்பட்ட சேலம் மாநகர தீவிர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
சேலம் மாநகர தீவிர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கணேசன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அப்போது நிலப்பிரச்சினை ஒன்றில் சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் லஞ்சம் கேட்டதாக கணேசன் மீது புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக இவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணை அறிக்கை சென்னையில் உள்ள உள்துறை செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனை பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்யும் படி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சேலம் மாநகர தீவிர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கணேசனை பணிநீக்கம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
2016-ம் ஆண்டு பழனி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது எழுந்த லஞ்ச புகாரில், சிக்கிய போலீஸ் அதிகாரி சேலத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாநகர போலீசாரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட கணேசன், தீவிர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மாற்றப்பட்டார். அதற்கு முன்பு 2 ஆண்டுகளாக சேலம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.