வெள்ளத்தில் மூழ்கிய பாலம் - பொதுமக்கள் அவதி
சிறுபாலம் மற்றும் தடுப்புச் சுவர் உயரத்தை அதிகரித்தால் வெள்ள பாதிப்பை தடுக்கலாம் என, குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Update: 2023-12-16 07:14 GMT
சென்னை அருகே போரூர் ஏரியின் உபரி நீர், குன்றத்துார் அருகே கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் வழியே செல்லும் கால்வாய் வாயிலாக அடையாறு கால்வாயை சென்றடைகிறது. இந்த கால்வாய் குறுக்கே, கெருக்கம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பூமாதேவி நகர் - மாதா நகர் இடையே சிறு பாலம் உள்ளது. ஆண்டுதோறும் வடக்கிழக்கு பருவ மழையின் போது இந்த கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது. வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் நுழைவதை தடுக்க, கால்வாயின் இருபுறமும் 2 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புச் சுவர் போதுமான உயரம் இல்லை. மேலும், கால்வாய் குறுக்கே உள்ள சிறுபாலம் தாழ்வாக உள்ளதால், அந்த வழியே கால்வாயில் செல்லும் வெள்ள நீர் பூமாதேவி நகர், மாதா நகருக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பூமாதேவி நகர் மக்கள் கூறியதாவது: மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது குடியிருப்பு பகுதியில் 3 அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கியது. இதனால், ஆறு நாட்களாக அவதிக்குள்ளாகினோம். கால்வாய் குறுக்கே உள்ள சிறு பாலத்தை உயர்த்தி கட்டி, கால்வாயின் கரைகளை மேலும் உயர்த்தினால், கெருகம்பாக்கத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கலாம். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.