குமாரபாளையத்தில் மேம்பாலப்பணிகள் தீவிரம்
குமாரபாளையம் அருகே சேலம்- கோவை புறவழிச்சாலை, கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. அதே போல் அதிக மக்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி மாறியுள்ளது. தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் நிறைய உள்ளதால், இவற்றில் படிக்கும் மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக அதிக வாகனங்கள் சென்று கொண்டுள்ளன. ஒருமுறை பொதுமக்கள் சாலையை கடக்க காத்திருந்தால் பாதி தூரம் கடக்க சுமார் 15 நிமிடமும், பாதி தூரத்தில் இருந்து மறுபக்கம் செல்வதானால் மேலும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகின்றது. இதனால் கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. இந்நிலையில் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவில் மேம்பாலம் அமைக்க அளவீடு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. நான்கு பக்க சர்வீஸ் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு சாலையின் அகலம் அதிகப்படுத்தப்படுகிறது. புறவழிச்சாலை அடைக்கப்பட்டு சர்வீஸ் சாலையில் வாகனங்கள் விடப்பட்டால் சாலை பரபரப்பாகி விடும். வாகன போக்குவரத்து சீராக செல்ல, போக்குவரத்து போலீசார் இங்கு இரவு பகலாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.