புதிய சட்டங்கள் குறித்து போலீசாருக்கு விளக்க பயிற்சி
போலீசாருக்கு புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த விளக்க பயிற்சி வகுப்பை கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.
காவல்துறையில் உள்ள குற்றச்சட்டங்கள் சிலவற்றை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து போலீசாருக்கு இந்த புதிய சட்டங்களை விளக்கும் வகையில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சேலம் மாநகர காவல்துறை சார்பில் புதிய சட்ட நடைமுறைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எந்தந்த குற்றச்செயல்களுக்கு சட்டங்கள் மாறி இருக்கிறது என்பது குறித்த பயிற்சி முகாம் கருப்பூர் மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய இடங்களில் நேற்று தொடங்கியது.
5 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த முகாமை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்து இதுபோன்ற பயிற்சியை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். கொண்டலாம்பட்டியில் துணை கமிஷனர் மதிவாணன் தலைமையிலும், கருப்பூரில் துணை கமிஷனர் பிருந்தா தலைமையிலும் இந்த பயிற்சி முகாம் நடந்து வருகிறது.