மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவு -காவிரி ஆணையத்தின் தலைவரின் உருவபொம்மை எரிப்பு

கர்நாடக அரசு கட்டவுள்ள மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரை கண்டித்து, அவரது உருவ பொம்மையை எரித்துகாவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-17 11:58 GMT
உருவப் பொம்மை எரிப்பு

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பாக வெள்ளிக்கிழமை , காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், கர்நாடக அரசு கட்டவுள்ள மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக செயல்படும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரை கண்டித்து உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். போராட்டத்தில் எஸ்.கே.ஹல்தர் உருவ பொம்மையை எரித்து, அவரை பதவி விலக வேண்டும் எனவும், மத்திய அரசு, கர்நாடக அரசை கண்டித்து முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது செய்தியாளர்களிடம் பெ.மணியரசன் கூறியதாவது:காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் நிறைவேற்றினார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேக்கேதாட்டு அணை குறித்த பொருளை முன் வைத்ததால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகக் கூறி, இதுவரை தடுத்து வந்த தமிழக அரசின் நீர்வளத் துறைச் செயலாளர் பிப்ரவரி 1 -ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? என்ற விளக்கத்தை அளிக்கவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரை 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிப்பது மட்டுமே காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம். கர்நாடகம் புதிய அணையைக் கட்ட அனுமதி தரும் அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு இல்லை. இந்நிலையில் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது. எனவே, கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படும் காவிரி ஆணையத் தலைவர் பதவியில் இருந்து எஸ்.கே.ஹல்தரை நீக்க வேண்டும்.

ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும் என்றார். இந்தப் போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளர் த.மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ப.ஜெகதீசன், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன், தமிழ்த் தேசிய முன்னேற்ற கழகத் தலைவர் த.சு.கார்த்திகேயன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச.சிமியோன் சேவியர்ராஜ், தமிழர் தேசியக் களத் தலைவர் ச.கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த சாமி.கரிகாலன், துரை.ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News