நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைவில் பஸ் வசதி
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைவில் பஸ் வசதி
நாமக்கல் - திருச்செங்கோடு ரோட்டில் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடைபெற்று, மாணவர்கள் மருத்துவ கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடந்த 22-ஆம் தேதி, திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மருத்துவமனை நாமக்கல் நகரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆஸ்பத்திரி செல்வதற்கு தற்போது பஸ் வசதி இல்லாததால், வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டாக்டர்கள், நர்ஸுகள், இதர பணியாளா்கள் உள்ளிட்டோர் பகல், இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வந்து செல்வதிலும் சிரமம் உள்ளது. அவா்களுக்கும் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இந்த நிலையில், நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியா் உமா தலைமை வகித்தார்.. ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் புதிய அரசு மருத்துவமனைக் கட்டடத்தை முழுமையாகச் செயல்படுத்துவது தொடா்பாகவும், அங்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், தற்போது மோகனூா் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில், இருந்து மருத்துவ உபகரணங்களை புதிய மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்வதற்கான பணிகள் திங்கள்கிழமை (நவ.27) முதல் தொடங்கப்படுவதாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு நோக்கி செல்லும் நகர, புறநகர் பஸ்கள் அனைத்தும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை சென்று திரும்பவும், இதற்காக அங்கு ஒரு பஸ் நிறுத்தம் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. ஷோ் ஆட்டோக்களில், நோயாளிகளின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய மருத்துவமனைக்கு வருவோர் புதிய மருத்துவமனைக்கு செல்லுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும், அனைத்து நோயாளிகள், பொதுமக்களிடம் புதிய மருத்துவமனை முகவரியை பணியாளா்கள் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி புதிய மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு மேல் ஆகலாம் என்றும் பழைய மருத்துவமனை கட்டத்தில் தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து உரிய வழிவகைகளை அதிகாரிகள் செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி மற்றும் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.