C-Vigil செயலி விழிப்புணர்வு - ஆட்சியர் அறிவுறுத்தல்
C-VIGIL செயலியை பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.;
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நேர்மையாக நடத்துவது தொடர்பாக C-VIGIL செயலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் நன்னடத்தை விதிகள் அனுமதியில்லா சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் அச்சடித்து வழங்குதல், வாக்கிற்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற அனைத்து தேர்தல் நன்னடத்தை விதி மீறல்கள் குறித்த புகார்கள் கைபேசியின் வாயிலாகவே மாவட்ட தேர்தல் பிரிவிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் C-VIGIL என்ற சிறப்பான வசதியினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. எனவே பணம்/பரிசுகள்/ கூப்பணிகள்/மதுபான விழியோகம், அனுமதியின்றி சுவரொட்டிகள்/பதாதைகள், தடை காலத்தில் பிரச்சாரம், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலும் ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் இதர பிற தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் VIG செயலி மூலம் புகைப்படம் /ஆடியோ/வீடியோ வடிவிலோ புகார்களை பதிவு செய்யலாம்.
இந்த செயலியை கைப்பேசியில் Google Play Store- மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் CVIGIL செயலியை பயன்படுத்தி, தேர்தல் விதி மீறல் குறித்த புகார்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து தேர்தலை அமைதியாக நடத்திட ஒத்துழைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.