ராமநாதபுரம் மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
ராமநாதபுரம் பரமக்குடி இல்லம் தேடி கல்வி மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, கேக் வெட்டி கொண்டாட்டம்.
Update: 2024-02-05 11:03 GMT
ராமநாதபுரம் பரமக்குடி இல்லம் தேடி கல்வி மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பார்த்திபனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவரிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் லியோன் தலைமை வகித்தார். இல்லம் தேடி கல்வி மூன்றாம் ஆண்டு தொடக்க விழா என எழுதிய கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. முன்னதாக விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை பள்ளி மாணவர்கள் பறை இசைத்து வரவேற்றனர். தொடர்ந்து இன்றைய காலகட்டத்தில் செல்போன், டிவி பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு ஆடல்,பாடல் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பார்த்திபனூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், பார்த்திபனூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அரசம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.