கார்கள் நேருக்கு நேர் மோதல்: 2½ வயது குழந்தை பரிதாப பலி

தென்திருப்பேரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது

Update: 2024-04-15 01:29 GMT

விபத்து 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம் பண்ணையைச் சேர்ந்தவர் சாஜித் ஹமீது (30). இவருடைய மனைவி அனீஸ் பாத்திமா. இவர்களுடைய பெண் குழந்தை மூசினா (2½). இவர்கள் குடும்பத்தோடு நேற்று முன்தினம் மாலை காயல்பட்டினத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சாஜித் ஹமீது ஓட்டினார். காரில் 5 பேர் பயணித்தனர். டிரைவரின் சீட் அருகே அனீஸ் பாத்திமா தனது மகளை மடியில் வைத்திருந்தார். நெல்லை வண்ணார்பேட்டை சாலியர் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சதீஷ். இவர் குடும்பத்தோடு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தென்திருப்பேரை அருகே உள்ள குருகாட்டூர் வரும்போது 2 கார்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் சாஜித் ஹமீது காரின் முன்பக்கம் இருந்த பலூன் வெளியே வந்ததில் குழந்தை மூசினாவுக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மூசினா நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த விபத்து குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2½ வயது குழந்தை இறந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News