திருடர்களைப் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள் மீது வழக்கு: ஈஸ்வரன் எம்.எல்.ஏ கண்டனம்.
கோழித் திருடர்களைப் பிடித்துக்கொடுத்த பொதுமக்கள் மீது வழக்கு: ஈஸ்வரன் எம்.எல்.ஏ கண்டனம்.
கோபி அருகே கோழி திருடிய, திருடர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த ஊர் பொதுமக்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள, கடுக்காம்பாளையம் வெங்கமேட்டில், வசித்து வரும் பழனியம்மாள் என்பவரது வீட்டின் வெளியில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை, திருடர்கள் சம்பவத்தன்று அதிகாலை 2 மணிக்கு திருட வந்துள்ளனர். கோழி சத்தமும், நாய்கள் குரைக்கின்ற சத்தமும் கேட்டு வெளியில் வர முயற்சித்த பழனியம்மாள் வெளிப்புறமாக கதவு தாழ் இடப்பட்டிருப்பதை அறிந்து அக்கம் பக்கம் இருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். ஜன்னல் வழியாக பார்த்தபோது 2 பேர் கோழிகளைப் பிடித்திருப்பதை கண்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தபோது, திருடர்கள் தப்பித்து ஓட முயற்சி செய்தனர். மேலும் அந்தப் பகுதி மக்கள் இரண்டு பேரையும் துரத்தி பிடித்துள்ளனர். கோழி திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதற்குப்பின் ஊர் மக்கள் ஒன்றாக சேர்ந்து அவர்களை காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்கு மட்டுமல்லாமல் வேறு சில வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த நேரத்தில், அவர்கள் திருடர்கள் என்று தான் ஊர் மக்களுக்கு தெரியும். அவர்கள் என்ன ஜாதி என்று ஊர் மக்களுக்கு தெரியாது. இரண்டு நாட்கள் கழித்து சில அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் லாபத்திற்காக திருடர்கள் இரண்டு பேரையும் தூண்டி விட்டு, ஊர் மக்கள் அவர்களை ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக மனு கொடுக்க வைத்துள்ளனர். ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு தொடர் குற்றங்களை செய்து கொண்டிருக்கின்ற இரண்டு திருடர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். காவல்துறை உண்மையை உணர்ந்து வழக்கு போட்டு செயல்பட துவங்கிய நேரத்தில் ஜாதி ரீதியாக, அரசியல் ரீதியாக அதை தடுக்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.
இந்த விஷயத்தில் காவல்துறை அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையாக நடந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு அமைதி பூங்காவாக இருக்கின்ற கொங்கு மண்டலத்தில் ஜாதிகளுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி அதில் அரசியல் லாபத்தை தேட முயற்சிக்கின்ற உள்நோக்கம் கொண்டவர்களை அடக்க வேண்டும். தைரியமாக திருடர்களைப் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள் மீது வழக்கு போட்டால், தன் சமூக கடமையை ஆற்றுவதற்கு எந்த பொது மக்களும் வரமாட்டார்கள். இதை போன்று வன்கொடுமை சட்டத்தில் பொய் வழக்குகள் போட முயற்சித்தால் மொத்த கொங்கு மண்டல மக்களும் எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் இது ஏதோ பொது பிரச்சனை போல் இரண்டு தரப்புகளுக்குமான அமைதி பேச்சு வார்த்தை நடத்துகிறோம் என்று கூட்டம் நடத்தி இருப்பது ஏற்புடையதல்ல. இந்த வழக்கில் காவல்துறையின் நேர்மையான செயல்பாடுகளை எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.