அ.தி.மு.க., பா.ஜ.க., மீது வழக்குப்பதிவு!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க., மாவட்ட செயலாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-03-26 05:39 GMT
நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பா.ஜ.க., வேட்பாளருமான எல். முருகன் மற்றும் அ.தி.மு.க., வேட்பாளரும் முன்னாள் சபாநாயகரின் மகனுமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக இரு கட்சியினரும் ஊட்டி நகரில் உள்ள காஃபி ஹவுஸ் பகுதியிலிருந்து ஊர்வலமாக செல்ல ஒரே நேரத்தில் திரண்டனர். பா.ஜ.க., வினருக்கும் அ.தி.மு.க., வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் வரைச் சென்றது. அ.தி.மு.க.,வினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலம் செல்ல அனுமதிக்க வில்லை எனக் கூறி காவல் துறையினரின் தடுப்பை மீறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தை தாக்க முற்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீஸார் லேசான தடியடி நடத்தினர். மாவட்ட காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து அ.தி.மு.க.,வினரும் பா.ஜ.க., வினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது, பட்டாசு வெடித்தது, காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஊட்டி பி-1 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளின் மீது ஒரு வழக்கும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் உட்பட முக்கிய கட்சி நிர்வாகிகள் மீது வழக்குகளும், பா.ஜ.க., மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News