பெரம்பலூரில் இதுவரை ரூ.1,17,37,451 மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை ரூ.1,17,37,451 மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்.
Update: 2024-04-18 06:16 GMT
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இதுவரை ரூ.1,17,37,451 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தகவல். மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தலைமையில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் தெரிவிக்கும் போது, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1665 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 56 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 903 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து இணைய வழியில் கண்காணிக்கும் வகையில், வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று 8,290 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் 5,216 நபர்களுக்கு EDC எனப்படும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை பெற்றவர்கள் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி மையத்திலேயே வாக்களிக்கலாம். 4,212 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன, பெரம்பலூர் பராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 7,01,400 ஆண் வாக்காளர்களும், 7,44,807 பெண் வாக்காளர்களும், 145 இதர வாக்காளர்களும் என மொத்தம் 14,46,352 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக 35 புகார்களும், சி.விஜில் செயலி மூலம் 25 புகார்களும் பெறப்பட்டு அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடத்தை விதிகளை மீறியதாக பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி வரை பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுவினர் மூலம் ரூ.1,17,37,451 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், ரூ.1,07,33,851 உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பில் இருந்து கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய நடத்தை விதிகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், . வாக்குப்பதிவு முடியும் வரை இனம், மதம், மற்றும் மொழி சார்ந்த தூண்டல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. தனிநபரை பாதிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது. மொத்தமாக குறுந்தகவல்கள் அனுப்புவதோ மற்றும் குரல் பதிவுகள் அனுப்புவதோ கூடாது. ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது. 5 நபர்களுக்கு மேலாக ஒன்றாக செல்ல அனுமதியில்லை, மேலும் அனைத்து வாக்காளர்களும் தவறாது தங்கள் வாக்கை செலுத்தி பொதுத்தேர்தல் அமைதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், . நடைபெற அனைவரும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். என தெரிவித்தார். இந் நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பு அலுவலர் சரண்யா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சிவா, தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.