சேலத்தில் பிளாஸ்டிக் கடை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் பறிமுதல்
சேலத்தில் பிளாஸ்டிக் கடை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் பறிமுதல்.பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.
Update: 2024-04-01 04:44 GMT
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் நடத்தும் அதிகாரி பிருந்தாதேவி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பாலச்சந்தர் ஆகியோரின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டசபை தொகுதி வாரியாக ஏற்படுத்தப்பட்டு உள்ள இந்த குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட அன்னதானப்பட்டி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுதா, ஏட்டு ராம்குமார் உள்ளிட்ட பறக்கும் படையினர் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை, தெய்வவிநாயகம் பிள்ளை தெருவை சேர்ந்த அப்தாராம் (வயது 37) என்பதும், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் பிளாஸ்டிக்பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருவதும் தெரிந்தது. காரில் சோதனை நடத்திய போது அதில் ரூ.20 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நேரில் வந்து அப்தாராமிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்டதாக ரூ.20 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சேலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.