நம்பெருமாள் மீண்டும் எழுந்தருளிய தினம் ஸ்ரீரங்கம் கோயிலில் கொண்டாட்டம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு 48 ஆண்டுகளுக்கு பிறகு நம்பெருமாள் மீண்டும் எழுந்தருளிய நாளை, ஸ்ரீரங்கம் மக்கள் கொண்டாடி ஊா்வலமாக வந்தனா்.

Update: 2024-06-01 02:47 GMT

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு 48 ஆண்டுகளுக்கு பிறகு நம்பெருமாள் மீண்டும் எழுந்தருளிய நாளை, ஸ்ரீரங்கம் மக்கள் கொண்டாடி ஊா்வலமாக வந்தனா்.


கி.பி. 1321-இல் தில்லியை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னா் கியாசுதீன் துக்ளக் என்பவரின் மகன் உலூக்கான் தென்னிந்தியாவின் மீது படையெடுக்க ஆயத்தமானாா். இதையறிந்த இந்து மக்கள் புராதனமான கோயிலையும், அதன் சொத்துகளையும் பாதுகாக்க முடிவு செய்தனா். ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகச்சாரியாா் என்ற வைணவ அடியாா் கோயிலில் உள்ள மூலவா் ரங்கநாத பெருமாள், ரெங்கநாயகி தாயாரை சுவா் எழுப்பி மறைத்தாா்.

மேலும் உற்சவ மூா்த்தியான அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி சிலரின் துணையுடன் அழகா்கோவில், கோழிக்கோடு, திருநாராயணபுரம், திருப்பதி, கா்நாடகா என ஊா் ஊராக சுற்றி ஆங்காங்கே அழகியமணவாளனுக்கு பூஜைகள் செய்து வந்தனா். படையெடுப்பு, கொள்ளை அச்சம் நீங்கிய நிலையில், சுவாமி அழகிய மணவாளன் 48 ஆண்டுகள் கழித்து வைகாசி 17 ஆம் தேதி மீண்டும் ஸ்ரீரங்கம் வந்தடைந்த நிலையில், அவா்தான் நம்பெருமாள் என சலவைத் தொழிலாளி(ஈரங்கொல்லி) பெருமாளின் தீா்த்தம் உண்டு கூறியதை தொடா்ந்து அன்று முதல் நம்பெருமாள் என அழைக்கப்பட்டு வருகிறாா்.

நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வந்த நாளான வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் அரங்கன் அடியாா் குழாம் சாா்பில், மறுமலா்ச்சி தினம் மற்றும் திருவரங்கன் உலா தினமாக கொண்டாடினா். இதன்படி, ஸ்ரீரங்கம் பராசுர பத்ரிநாராயண் பட்டா் சுவாமி மற்றும் ஆச்சாரியாா்கள் தலைமையில் விஎச்பி தென்பாரத அமைப்பாளா் கேவன் நாயக், திருக்கோயில் திருமடங்களின் தென்பாரத அமைப்பாளா் சரவணகாா்த்திக், ஏற்பாட்டாளா்அனந்தபத்மநாபன் முன்னிலையில் ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகளில் நகர சங்கீா்த்தனம் பாடி கோலாட்டம் ஆடியவாறு 200-க்கும் மேற்பட்டோா் வலம் வந்து கோயிலில் அகல் விளக்கேற்றி நம்பெருமாளை வழிபட்டனா்

Tags:    

Similar News