காட்டி கொடுத்த செல்போன் சிக்னல் - தப்பியோடிய கைதி கைது
தூத்துக்குடி நீதிமன்ற கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி ஓடிய கைதியை போலீசார் கோயம்புத்தூரில் கைது செய்தனர்.
தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் அற்புதராஜ். மகன் செல்வசதீஷ் என்ற சூபி (24). இவர் நண்பரை கொலை செய்த வழக்கில் கடந்த 9.5.2022 முதல் சிறையில் இருந்து வந்தார். இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தென்பாகம் போலீசில் குற்றவாளிகள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். நண்பரை கொலை செய்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக தூத்துக்குடி பேரூரணி சிறையில் இருந்த செல்வசதீசை ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர் மற்றும் 2 பயிற்சி போலீஸ் உள்பட 5 பேர் தூத்துக்குடி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு நின்றபோது, செல்வசதீஷ் திடீரென கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். அப்போது கழிவறை ஜன்னலை உடைத்து செல்வசதீஷ் தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் கோயமுத்தூர் சென்று அவரது செல்போன் மூலம் துப்பு துலக்கி செல்வ சதீஷ் கைது செய்து தூத்துக்குடி கொண்டு வந்தனர். பின்பு அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் ப்படுத்தி மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.