அரகண்டநல்லூரில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு - 2 மாணவர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வடகரைத்தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் என்பவரின் முருகன்(32). இவர், விழுப்புரம்-திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முருகனை மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். இந்த நிலையில் அரகண்டநல்லூர் பாலிடெக்னிக்கல்லூரி அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், விழுப்புரம் ஆஞ்ச நேயர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ்குமார்(20), விழுப்புரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும், விழுப்புரம் தாலுகா பில்லூர் கிராமம் பாரதி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் அஜய்ராஜன்(19) என்பதும், விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் லேப்டெக்னீசியன் 2-ம் ஆண்டு படித்து வருவதும், முருகனிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.