செல்போன் திருடனுக்கு வலைவீச்சு
பயணிகளிடம் நூதனமாக செல்போன் திருடும் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தன்னிடம் செல்போன் இல்லை என்றும், வீட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ போன் பேச வேண்டும் என்றும் கூறி பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடமும், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளிடமும் செல்போன் வாங்குகிறார். பின்னர் அவர் பேசுவது போல் நடித்து செல்போனுடன் அந்த இடத்தை விட்டு மெதுவாக நகருகிறார். இதனால் செல்போன் கொடுத்த பயணிகள் அவரை பிடிப்பதற்குள் தப்பித்து ஓடி விடுகிறார். இது தொடர்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலை யத்திலும், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திலும் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து பெரம்பலூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் புதிய பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட தில், பயணிகளிடம் செல்போனை நூதனமாக திருடிச்செல்லும் நபரின் உருவம் பதிவாகியிருந் தது, அதன் அடையும் கொண்டு அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அந்த நபர் செல்போனை திருடிக்கொண்டு தப்பித்து செல்லும் வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவரை கண்டால் போலீசாரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும், என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.