ஜமாப் இசைத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பு

ஊட்டியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது இசை கலைஞர்களுடன் இணைந்து ஜமாப் அடித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-08 06:50 GMT

 ஜமாப் இசைத்த எல்.முருகன்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூக்கல்தொரை, அஜ்ஜூர், கக்குச்சி, தும்மனட்டி உள்ளிட்ட படுக சமுதாய மக்கள் வாழும் கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது படுக மக்களின் விருப்பத்திற்கு இணங்க, படுக மக்களின் பாரம்பரிய உடை அணிந்து வலம் வந்தார். மேலும் அவரிடம் படுக மொழியில் நலம் விசாரித்து சற்று நேரம் பேசினார்.

அப்போது தும்மனட்டி கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். தொடர்ந்து ஊட்டியில் அருந்ததியர் சமூகத்தினர் சார்பில் நடந்த பட்டத்தரசி அம்மன் தேர் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது ஜமாப் இசைக் கலைஞர்களுடன் இணைந்து ஜமாப் இசைக் கருவியை இசைத்தார்.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர் தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியலில் மட்டுமல்லாமல், போதைப் பொருள் கடத்தலிலும் கூட்டணி வைத்துள்ளது. திரைப்பட இயக்குனரிடம் டெல்லியில் விசாரணை மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில் விரைவில் கோபாலபுரத்தின் கதவை தட்டும் நேரம் வர இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். அப்போது அவருடன் நீலகிரி மாவட்ட பா.ஜ.க., தலைவர் மோகன்ராஜ், கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News