மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலை
கரூர் நகர காவல் நிலையம்
கரூர் மாவட்டம் ஆண்டாள் கோவில் கீழ்பாகம், எல்.ஆர்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜானகி (55). இவர் நேற்று காலை 8 மணி அளவில் எல் ஆர் ஜி நகர் பகுதியில் உள்ள பரமேஸ்வரி மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 25 முதல் 30 வயது உடைய இரண்டு மர்ம நபர்கள், ஜானகியின் கழுத்தில் அணிந்து இருந்த இரண்டேகால் பவுன் தங்கச் செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகி இதுகுறித்து கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..