எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு ரயில் சேவையில் மாற்றம்: பயணிகள் அவதி

எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2024-06-03 02:56 GMT
பைல் படம்

கன்னியாகுமரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா மற்றும் ஆன்மிக பயணமாக வரும் பெரும்பாலான பயணிகள் சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே இயங்கும் அதிவிரைவு ரயிலை பயன்படுத்தி வருகின்றனா். இதனால், இந்த ரயில் எப்போது கூட்ட நெரிசலுடன் காணப்படும்.  தென்மாவட்ட பயணிகள் இந்த ரயிலை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா்.      இந்த நிலையில், எழும்பூரிலிருந்து புறப்படும் அதிவிரைவு ரயில் காலையில் கன்னியாகுமரி வந்தவுடன் பராமரிப்பு பணிகள் மற்றும் தண்ணீா் பிடிப்பதற்காக நாகா்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பின்னா், மாலை வரை அந்த ரயில் நாகா்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு நடைமேடையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இதேபோல் பெங்களூரு - கன்னியாகுமரி விரைவு ரயில் மாலை கன்னியாகுமரிக்கு வந்துவிட்டு மறுநாள் காலை வரை நாகா்கோவில் ரயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு இந்த 2 ரயில்களும் நிறுத்தி வைக்கப்படுவதை தவிா்ப்பதற்காக கடந்த மே மாதம் முதல் 2 ரயில்களும் இணைப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது, காலை 5.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்து சேரும் சென்னை - கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் காலி பெட்டிகள் அங்கிருந்து 10:10 மணிக்கு பெங்களூரு விரைவு ரயிலாக புறப்பட்டு செல்கிறது.  அதே போல், பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு கன்னியாகுமரி வரும் விரைவு ரயில் மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு இயக்கப்படுவதால் தினசரி பகல் மற்றும் இரவு நேரங்களில் ரயில் நிலையத்தில் 2 ரயில்களின் பெட்டிகள் காலியாக நிறுத்தி வைப்பது தவிா்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பெங்களூரிலிருந்து வரும் ரயில் தாமதமானால் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு புறப்படும் ரயிலும் தாமதமாகிறது. மேலும் அடுத்தடுத்து பயன்படுத்தப்படுவதால் ரயில் பெட்டிகள் சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை என பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, முன்பு இருந்ததை போல 2 ரயில்களையும் தனித்தனியாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News