பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோவில் முக்கிய திருவிழாவான பூக்குழி திருவிழாவில் நேற்று நேர்த்திக் கடனை நிறைவேற்ற பல்லாயிரகணக்கான பக்தர்கள் பூ இறங்கி வழிபாடு செய்தனர். சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் பூக்குழி திருவிழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் ஆறு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் 13 நாட்கள் நடைபெறும் பூக்குழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 12 ஆம் நாள் பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது.இதற்க்கு முன்னதாக கடந்த 12 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஆண்கள்,பெண்கள் உட்பட சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து தங்கள் வழிபாட்டை செய்தனர்.நேற்று நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்க்கு மேற்பட்டோர் மஞ்சள் காப்பு அணிந்து பூ இறங்கி வழிபட்டனர்.
இந்நிலையில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பங்குனி மாத பூக்குழி திருவிழாவின் 13வது நாள் நிறைவு நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.திருத்தேரில் பெரிய மாரியம்மன் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 13 நாள்கள் விரதம் இருந்து தேரை வடம் பிடித்து இழுப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கைகூடிவரும்,நினைத்த காரியங்கள் நிறைவேறும், திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும்,குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்.
இத்தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயில் முன்பாக வந்தடைந்தது. பக்தர்கள் விரதத்துடன் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை எடுத்துச் சென்றனர். 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.