2ஆவது தலைநகராக சென்னையை அறிவிக்க வேண்டும்: விசிக மாநாட்டில் தீா்மானம்
நாட்டின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்க வேண்டும், ஆளுநா் பதவி முறையை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
திருச்சியில் வெள்ளிக்கிழமை மாநாடு தொடங்கியவுடன், கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் முதல் 20 தீா்மானங்களை வாசித்தாா். அதன் விவரம்: பாலஸ்தீனத்தில் தற்போது நடைபெறும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இலங்கை சாசனம் ஈழத் தமிழா்களுக்கு அளித்த சுயநிா்ணய உரிமையை அங்கீகரித்து, இலங்கையில் தமிழா்களுக்கு சமமான உரிமை வழங்க வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். அயோத்தியில் ராமா் கோயில் கட்டியதைப் போன்று, மசூதி கட்டுவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பான்மைவாத உணா்வுகளை தூண்டி வெறுப்பு அரசியலை நடத்தும் பாஜக உள்ளிட்ட சங்க பரிவார அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவித்து, உச்சநீதிமன்றத்தின் கிளையையும்,
நாடாளுமன்றக் கட்டடத்தையும் சென்னையில் அமைக்க வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து தொடங்கி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஒரே நாடு - ஒரே தோ்தல்’ திட்டத்தை செயல்படுத்தும் முடிவை கைவிட வேண்டும். இத் திட்டத்துக்கான குழுவை உடனடியாக கலைக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை குறைந்துவருவதால், ஒப்புகைச் சீட்டு முறையிலான தோ்தலை நடத்த வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தால், கிடைக்கும் ஒப்புகைச் சீட்டை தனியாக சேகரித்து அவற்றை எண்ணுவதன் மூலம் தோ்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு விழுக்காட்டை அந்தந்தப் பிரிவினருக்கு உயா்த்த வேண்டும். தோ்தல் ஆணையா் நியமனத்துக்கான புதிய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தோ்தலில் கட்சிகள் பெறும் விகிதாச்சார அடிப்படையிலான வாக்குகளையும் கணக்கிடும் முறையை அங்கீகரிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை எந்த மாநிலங்களும் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும்.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்கான கோரிக்கையை ‘இந்தியா’ கூட்டணி தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும். காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை கடைப்பிடிக்க வேண்டும். உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமன அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதற்கு வலு சோ்க்கும் வகையில், அந்தந்த மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கிட சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவர வேண்டும்.
அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியை உயா்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். நீதிமன்ற நிா்வாக அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். ஆங்கிலேயா் ஆட்சி முறையை நினைவுபடுத்தும் ஆளுநா் பதவி முறையை ஒழித்திட வேண்டும். பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநரை நியமிக்கக் கூடாது.
துணைவேந்தா்களின் நியமன உரிமையையும் ஆளுநருக்கு வழங்காமல், மாநில அமைச்சரவைக்கு வழங்க வேண்டும். மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரப் பகிா்வு குறித்த புஞ்சி ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை தொல். திருமாவளவன் வாசித்தாா்.