திருச்செந்தூர் முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு!

சித்ரா பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-25 04:38 GMT

பக்தர்கள் கூட்டம் 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வசந்த திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி கிரிபிரகாரம் வலம் வந்து கோவிலை சேர்ந்தார். மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News