நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் சிலிண்டர் கசிவு
நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் சிலிண்டர் கசிவு காரணமாக 2 ஊழியர்கள் தீயனைப்பு துறையினர் உட்பட 5 பேர் மயக்கம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு மூக்கடல் அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் முக்கடலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் குழாய்கள் வழியாக நாகர்கோவில் கொண்டுவரப்பட்டு,
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வருகிறது. அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் நகர் முழுவதும் மூன்று லட்சம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் கொட்டாரம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கும் குடிநீர் செல்கிறது.
இந்த நிலையில் நேற்று இந்த குடிநீர் வழங்கும் நிலையத்தில் திடீரென தண்ணீரை சுத்தம் செய்ய குடிநீரில் கலக்கக்கூடிய குளோரின் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குளோரின் லீக் ஆனதில் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த பம்ப் ஆப்ரேட்டர்கள் ஆபிராகாம், அருண் ஆகிய இருவரும் மயக்க நிலை அடைந்தனர்.
தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று இந்த லீக்கை சரி செய்ய முயன்றனர். அப்போது தீயணைப்பு துறையைச் சேர்ந்த வரதராஜன், கருப்பசாமி, சுயம்பு சுப்பராமன் ஆகிய மூன்று தீயணைப்பு படை வீரர்களும் மயக்கம் நிலை அடைந்தனர். மொத்தம் ஐந்து பேர் மயக்க நிலை அடைந்து அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் வீடுகளில் உள்ளவர்களும் கலக்கமடைந்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடைபெற்றது என வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பணியாளர்களின் கவனக்குறைவே இதற்க்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.