உளுந்தூர்பேட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் !

உளுந்துார்பேட்டை அருகே வெளியூரைச் சேர்ந்த நபர்களுக்கு பட்டா வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-05-02 04:23 GMT

சாலை மறியல்

உளுந்துார்பேட்டை அருகே வெளியூரைச் சேர்ந்த நபர்களுக்கு பட்டா வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்துார்பேட்டை தாலுகா நாச்சியார் பேட்டை பகுதியில் வீடு இல்லா ஆதிதிராவிடர்கள் 104 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.

அந்தப் பகுதியில் எஞ்சியிருந்த 40 செண்டு இடம் ஆதிராவிடர்களுக்கு பட்டா வழங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த 40 சென்ட் இடத்தை வெளியூர் நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனை தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சந்தானம்சக்திவேலை நேற்று முன்தினம் பட்டா வாங்கிய தரப்பினர் தாக்கினர். இதில் காயமடைந்த சந்தானம்சக்திவேல், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் வெளி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதை கண்டித்து விருத்தாசலம் சாலையில் நாச்சியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நேற்று காலை 11.30 மணியளவில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News