மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

செல்லூர் குலமங்கலம் சாலையில் மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-05-15 06:27 GMT

சாலை மறியல் 

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செல்லூர் - குலமங்கலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து நெரிசல் - பல மாதங்களாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் குற்றச்சாட்டு

கடந்த சில தினங்களாக மதுரை மாநகர் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் மதுரை மாநகராட்சியின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதோடு பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தெருக்களிலும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

Advertisement

இதேபோன்று பல்வேறு வார்டு பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் 24 வது வார்டுக்கு செல்லூர் எலி அய்யனார் கோவில் தெரு , எம்.ஜி.ஆர் தெரு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தெருக்களில் கழிவுநீர் தேங்குவதும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யாததை கண்டித்தும் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். 

 மேலும் இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி உள்ளிட்டவரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தொடர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதோடு பல்வேறு நோய்த்தொற்றுகளும் உருவாகுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தனர்.

இந்நிலையில் இன்று அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது தெருக்களில் கழிவுநீர் தெருவில் தேங்குவது, குடிநீர் விநியோகம் தாமதம் ஆகிய பிரச்சனைகளை மாநகராட்சி சீரமைக்க கோரி குலமங்கலம் பிரதான சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   இதனால் குலமங்கலம் சாலை முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரமாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவானது.  இதனையடுத்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இதனையடுத்து தங்களது தெரு பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகளை அழைத்துச் சென்று ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பிரச்சனைகளுக்கு குறித்து நேரடியாக எடுத்துரைத்தனர் அப்போது பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தாங்கள் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காமல் தங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் கழிவுநீர் தெருக்கலில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வரக்கூடிய நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News