குடியுரிமை திருத்தச் சட்டம் - மாநில அரசுக்கு உரிமை உண்டு

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு என திருச்சி சிவா எம்.பி தெரிவித்தார்.

Update: 2024-03-14 02:04 GMT

திருச்சி சிவா 

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்தது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தப்படமாட்டாது என தமிழக முதல்வர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி கூறியிருக்கிறார். ஆனால், அமல்படுத்தப்படாமல் இருக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தான் இருக்கும் இடத்தின் தன்மையுடன் பேசியிருக்கிறார்.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அதிகாரங்கள் உள்ளன. பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டாலும், அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்கிற அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு. பேரறிஞர் அண்ணா இரு மொழித் திட்டத்தைச் சட்டப்பேரவையில் நடைமுறைப்படுத்துகிற போது, நாடாளுமன்றம் இயற்றிய மொழி தொடர்பான சட்டத்தையும், தீர்மானத்தையும் இப்பேரவை நிராகரிக்கிறது எனக் கூறித்தான் நிறைவேற்றினார். எனவே, ஒரு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கும் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி முழுமையாக வெற்றி பெறும். வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல பாதகமான சட்டங்களை மறுபடியும் திருத்தி, இந்தியாவை ஜனநாயக பாதையில் கொண்டு செல்ல முழு முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார் சிவா. முன்னதாக, ஆண்டு விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப. சுப்பிரமணியன், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா. விஜயா, துணை முதல்வர் ரா. தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News