ராஜபாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதி செய்து தரக்கூறி பொதுமக்கள் சாலை மறியல்.

Update: 2024-04-15 16:20 GMT

சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். சங்கரன் கோயில் சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதி மக்கள் குடிநீர் பிடிப்பதற்கு, சாலையின் மறுபுறம் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சாலையை கடந்து வர வேண்டும். நேற்று இரவு இப் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற 50 வயது மூதாட்டி தண்ணீர் பிடிக்க சாலையை கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இன்று காலை மாரியம்மாள் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இறந்த மாரியம்மாளின் மகள் ராஜேஷ்வரி கடந்த ஒரு மாதத்திற்கு முன் இதே போல தண்ணீர் பிடிக்க சென்ற போது, வாகனம் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று தாய் உயிரிழந்துள்ளார். இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதால், உயிர் பயத்துடன் வாழும் நிலை இருப்பதாக அப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே தங்களின் பாதுகாப்புக்காக வேகத்தடை அமைக்க கோரி இந்திரா நகர் எதிரே சங்கரன் கோயில் பிரதான சாலையில் பொது மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களிடம் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். வேகத்தடை அமைக்காமல் போராட்டத்தை கை விட மறுத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பொது மக்கள் சாலை மறியலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News