கமுதி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

கமுதி அருகே மோசமான சாலையை சீரமைக்க கோரி கருவேல செடிகளை சாலையில் போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-05-28 04:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.நெடுங்குளம் சாலையை சீரமைக்க கோரி நேற்று அப்பகுதி மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கமுதி அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமம் வழியாக திருச்சிலுவைபுரம், உடைகுளம், நல்லாங்குளம், புதுப்பட்டி உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். கே.நெடுங்குளம் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு, தற்போது மிக மோசமான நிலையில் உள்ளதால், 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமான சாலையில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் இச் சாலையைக் கடப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த 8 கி.மீ சாலையைக் கடக்க 40 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால், அவசர காலங்களில் வரும் ஆம்புலன்ஸ் வேகமாக செல்ல முடியாததால், பல உயிர்கள் பலியாகி உள்ளன என்றும், இச் சாலையில் சென்ற ஆட்டோ கவிழ்ந்து இரண்டு பெண்களுக்கு இந்த சாலையிலேயே பிரசவம் ஏற்பட்டதாகவும் கூறி கே.நெடுங்குளம், திருச்சிலுவையாபுரம், உடைகுளம், நல்லாங்குளம், புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கமுதி - கீழ்குடி சாலையில் கருவேல முட்களை சாலை நடுவே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சமாதானப் படுத்தியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடவில்லை. பின்னர் கமுதி யூனியன் ஆணையாளர் கோட்டைராஜ் மறியல் நடக்கும் இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நடத்தை விதிகள் முடிந்தவுடன் சாலை உடனடியாக போட்டு தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News