கோவை : புறநகர் பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை!

கோவை மாநகரின் புறநகர் பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-05-12 07:10 GMT

மழை 

கோவை:தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் வெப்பம் பதிவாகி இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் வறண்டதால் பொதுமக்கள் குடிநீர் கொஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வெப்ப அலை குறைந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கோவைக்கு கடந்த மூன்று நாட்களாக மழை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், அவ்வப்போது மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மட்டும் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. மாநகரப்பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை மட்டுமே பெய்து வந்த நிலையில், வெப்பம் வெகுவாக குறைந்து இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் நான்கு மணியளவில் கோவை மாநகரின் புறநகர் பகுதிகளான கவுண்டம்பாளையம்,இடையர்பாளையம்,சாய் பாபா காலனி கோவில்மேடு,வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.பலத்த இடி மின்னலுடன் காற்று அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் சற்றே சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News