மழையால் கொடைக்கானலில் குளிர்ச்சியான சூழல்
கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Update: 2024-05-10 16:22 GMT
தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதல் மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில் மாலை வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது,
குறிப்பாக ஏரிச்சாலை ஆனந்தகிரி, மூஞ்சிக்கல், உகார்த்தேநகர், சீனிவாசபுரம், குறிஞ்சிநகர், செண்பகனூர், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையாகவும், மேலும் ஒரு சில பகுதிகளில் சாரல் மழையாகவும் பெய்து வருகின்றது, மலைப்பகுதியில் மழை தொடர்வதால் குடி நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்து வருவதுடன் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழலும் நிலவி வருகிறது.