பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூரில் மாதிரி வாக்கு சாவடிகளை ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி, ஒரு மகளிர் வாக்குச்சாவடி, முதல் தலைமுறையினர் வாக்களிக்கும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட திருநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என பார்வையிட்டார். இந்த மாதிரி வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க வரும் வாக்காளர்களை வரவேற்கும் விதமாக வாக்குச்சாவடி மையங்களின் நுழைவாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டு, தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது , மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மண்ணச்சநல்லூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.