இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட நேரு காலனி, பாக்கியசெல்வன் நகர், பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டனர்.
Update: 2024-02-12 12:34 GMT
தூத்துக்குடி அருகே உள்ளது மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து இந்த பஞ்சாயத்தில் உள்ள நேரு காலனி, மற்றும் பாக்கிய செல்வன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேரு காலனி மற்றும் பாக்கியசெல்வன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே அதற்கு முன்பாக தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.