கலெக்டர் நேரில் ஆய்வு
சோளிங்கரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.5.08 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.5.08 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, ஐயந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
4 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கி நன்றாக படிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், பழைய பாளையம் ஊராட்சி காலனி தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கீழ் ரூ.2.15 லட்சம் சிமென்ட் சாலை போடுவதையும், மோட்டூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.20 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கப்பட்டுள்ளதையும், குன்னத்தூர் ஊராட்சியில் அமராவதி பட்டணத்தில் தச்சன்குளம் ரூ. 9.80 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கூடலுார், வைலாம்பாடி, ஐயபேடு உட்பட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் என மொத்தம் 5.08 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளையும், சோளிங்கர் வட்டம் பாாணாவரம், ரங்காபுரம் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக அளித்த மனுதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, நிர்மல்குமார், பொறியாளர் செவ்வந்தி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர்.