குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் இழப்பு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் காப்பீட்டு செய்யப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் இழப்பு கோரிக்கைகளுக்கான தீர்வு காணும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தொடங்கி வைத்து, உரையாற்றினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. பேசியதாவது: அதீத கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் வழிகாட்டுதல் முகாம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட தொழில் மையம் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து அதீத கனமழை மற்றும வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை மீண்டும் நிறுவவும், புதிதாக தொழில் தொடங்கவும் அரசு மானியத்துடன் கூடிய சிறப்பு வங்கி கடன் வழங்குவதற்கான முகாம் 05.01.2024 மற்றும் 06.01.2024 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
இம்முகாமில் அனைத்து வங்கிகளும், மாவட்ட தொழில் மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தாட்கோ, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளும் கலந்து கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணத்திற்கான சிறப்பு கடனுதவி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகிய துறைகள் மூலமாக கடன் பெறுவதற்காக ரூ.3304 இலட்சம் திட்ட மதிப்பிலான 761 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காப்பீட்டு செய்யப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் இழப்பீட்டு கோரிக்கைகளுக்கான தீர்வு காணும் முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இம்முகாமில் நேஷனல் இன்சூரன்ஸ், சோழ மண்டல இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் மற்றும் எஸ்.பி.ஐ. இன்சூரன்ஸ் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களின் அலுவலர்கள் பங்கேற்றனர்.