தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த பெண் மீது புகார்
தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த பெண். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 06:38 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது வாகித் . இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- நான் உகாண்டா நாட்டில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறேன். உகாண்டா தமிழ்ச்சங்கம், உகாண்டா கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் கோட்டார் பகுதி சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2022 முதல் 2023 வரை உகாண்டாவில் உள்ள எனது நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது எனது நிறுவன ரகசியங்களை போட்டி நிறுவனத்திற்கு கசிய விட்டார். இதன் காரணமாக அவரை வேலையை விட்டு நீக்கி விட்டேன். இதை தொடர்ந்து அவர் ஊர் திரும்பினார். எனினும் என்னிடம் வேலை கேட்டு தொடர்ச்சியாக செல்போன் மூலம் அழைத்தார். இந்த நிலையில் உகாண்டாவில் இருந்த போது எனக்கும் அந்த பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண் கூறிய தேதியில் நான் சொந்த ஊரில் இருந்ததால் அந்தப் பெண் கூறியது பொய் என தெரியவந்தது. எனவே அவரை கண்டித்தோம். எனினும் அந்தப் பெண் போலியாக சமூக வலைத்தளங்களில் எனக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதாக வதந்தி பரப்பி இருக்கிறார். என்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.