ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மரம் வெட்டியதாக புகார்
ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மரம் வெட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மரங்களை வெட்டப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் பேரில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கோவில் வளாகத்தின் பின்புறம் உள்ள நந்தவனத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த அத்தி மரம் வெட்டப்பட்டுள்ளது. இந்த மரம் கோவில் பராமரிப்பு பணிகளின் வசதிக்காக வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே போல் கோவில் முன்பாக உள்ள வன்னி மரத்தின் கிளைகளும் வெட்டப்பட்டுள்ளது. இந்த மரங்கள் முறையான அனுமதியில்லாமல் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்களின் புகாரின் அடிப்படையில் மக்கள் தன்னுரிமைக் கட்சி நிறுவனர் நல்வினைச்செல்வன், பாமக நிர்வாகிகள் ஆ.மோகன்ராஜூ, பாலு, நகர வளர்ச்சி மன்றத் தலைவர் வி.பாலு உள்ளிட்டோர் அப்பகுதியில் நேரில் பார்வையிட்டு, வருவாய்த்துறையினர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் தங்கம், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலரும் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
கோவில் நிர்வாக அலுவலர் நந்தகுமாரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்களின் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறையினர் உறுதியளித்தனர். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.