சேலத்தில் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கியதாக புகார்

சேலத்தில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.;

Update: 2024-03-31 11:25 GMT

திமுக பிரமுகர் வீடு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் முக்கிய இடங்களில் நின்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் சேலம் அய்யந்திருமாளிகை அருகே உள்ள பிரகாசம் நகரை சேர்ந்தவரும், தி.மு.க. அயலக அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான வக்கீல் திருநாவுக்கரசுவின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக நேற்று தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவரது வீடு மற்றும் நிதி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தினர். கணக்குகளையும் அதிகாரிகள் சரிபார்த்தனர். மேலும் அவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை முடிவில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு அழைக்கும் போது வர வேண்டும் என்று அவரிடம் கூறிவிட்டு அங்கிருந்து பறக்கும் படையினர் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News