கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கொலை வழக்கு: 4பேர் கைது
திருக்கோவிலுாரில் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலுாரில் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செம்மலை மகன் சிவா, 33; இவர், கடந்த 28ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், டி.எஸ்.பி., மனோஜ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலாஜி மேற்பார்வையில், 4 சப் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், இறந்த சிவாவின் மொபைல் போனில் கடைசியாக தொடர்பு கொண்டவர்களின் தகவல்களை போலீசார் சேகரித்தனர்.
அதில், திருக்கோவிலுார், தெப்பக்குள தெருவைச் சேர்ந்த சேகர் மகன் பரணிதரன், அவரது கூட்டாளிகள் தேவியகரம் ஏழுமலை மகன் ஜெகநாதன், சென்னை, புளியந்தோப்பு ரகுராமன் மகன் சந்தோஷ்குமார் பெரம்பூர் சரவணன் மகன் நவீன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில், கொலை செய்யப்பட்ட சிவாவுடன் பரணிதரன் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார்.சிவா கம்ப்யூட்டர் சென்டர் வைப்பதற்கு, பரணிதரன் 10 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டதால் சிவா தனது கடைக்கு சர்வீசுக்காக வந்த லேப்டாப் ஒன்றை பரணிதரனிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக கொடுத்துள்ளார்.
இதனை பரணிதரன் விற்று விட்ட நிலையில், சிவா லேப்டாப்பை திருப்பி கேட்டு பரணிதரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால், ஆத்திரமடைந்த பரணிதரன், சிவாவை தீர்த்து கட்ட முடிவு செய்து தனது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த சந்தோஷ்குமார், நவீன் இருவரையும் பரணிதரனை திருக்கோவிலுார் வரவழைத்து, ஜெகநாதன் துணையுடன், சிவாவிற்கு மது வாங்கிக் கொடுத்துள்ளனர்.
டாஸ்மாக் கடை பின்புறம் அழைத்துச்சென்று, நால்வரும் சேர்ந்து சிவாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து பரணிதரன், ஜெகநாதன், சந்தோஷ்குமார், நவீன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.