அமைச்சரால் ஏற்பட்ட குழப்பம் -போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையாளர்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர் உதயநிதியின் பயண நேர குழப்பத்தால் பார்வையாளர்கள் பல மணிநேரம் தடுக்கப்பட்டனர். இதனால் உச்சிவெயிலில் அவதிப்பட்ட அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7 மணி அளவில் இந்த போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 12 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டியை விஐபி கேலரியில் அமர்ந்து கண்டு ரசித்தார். இதற்கிடையில் சுமார் 11 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டு விடுவார் என கூறி பாதுகாப்பு கருதி காவல்துறையினர் வேலி அமைத்து பார்வையாளர்களை தடுத்து நிறுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் உதயநிதி ஸ்டாலின் வெளியே வராததால் பார்வையாளர்கள் அனைவரும் உச்சி வெயிலில் கூட்டத்தில் சிக்கி காத்திருந்தனர்.
இதில் சிலர் முறையாக அனுமதிச்சீட்டு வைத்திருந்தும் அனுமதிக்காத காரணத்தால் எங்களை ஏன் அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விஐபிகள் பொது பார்வையாளர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வெயிலில் கூட்டத்திற்கு மத்தியில் சிக்கி தவித்தனர். அமைச்சர் இப்போது வருவார் அப்போது வருவார் என காத்திருந்து காத்திருந்து வெயிலின் வெப்பம் தாலாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பச் சென்றனர். மேலும் சிலர் காவல்துறையினிரடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதன் காரணமாக பார்வையாளர்கள் நுழைவாயில் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.