கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி - இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டய பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சேலம் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டய பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி காலம் ஓராண்டு ஆகும். மேலும் இந்த பயிற்சி 2 பருவங்களை கொண்டது. இதற்கு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2024-ந் தேதி அன்று 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
ஜூலை மாதம் 19-ந் தேதி வரை www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க இயலாது. பயிற்சிக்கான தேர்வை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.100-யை இணைய வழியாக செலுத்த வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதுடன் அதற்கான சான்றிதழ் நகல்களையும் கையெழுத்திட்டு மேலாண்மை நிலையத்துக்கு நேரில் அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சிக்கான கட்டணமான ரூ.18 ஆயிரத்து 750-ஐ ஒரே தவணையில் இணையவழி மூலம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.