நாமக்கல்லில் ரூ.96.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
By : King 24x7 Website
Update: 2024-02-14 04:13 GMT
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 96.50 லட்சம் மதிப்பிலான, 3,850 மூட்டை பருத்தி விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல்- திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் (NCMS) உள்ளது. இந்த சங்கத்தில் வாரம்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல், மோகனூர், வளையப்பட்டி, எருமப்பட்டி, பவித்திரம், வரகூர், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்வார்கள். திருச்செங்கோடு, கொங்காணாபுரம், பள்ளிபாளையம், ஈரோடு, அவிநாசி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்வார்கள். தற்போது, பருத்தி சீசன் துவங்கியுள்ளதால், நேற்று பிப்ரவரி. 13ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம் 3,850 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேரடி ஏலத்தில் RCH ரக பருத்தி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,689 முதல் ரூ. 7,601 வரை விற்பனை ஆனது. TCH ரக பருத்தி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7,501 முதல் ரூ. 10,100 வரை விற்பனை ஆனது. மட்ட ரக கொட்டு பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4,150 முதல் ரூ. 6,109 வரை விற்பனையானது. மொத்தம் 3,850 மூட்டை பருத்தி ரூ. 96.50 லட்சம் மதிப்பில் நேரடி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.