திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் வாகன பேரணி
குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டூவீலர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஏப். 19ல் லோக்சபா தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரேமலதா, தி.மு.க.விற்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின், பா.ஜ.க. கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாசன் ஆகியோர் குமாரபாளையம் வந்து பிரச்சாரம் செய்தனர். நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து, நடிகை கவுதமி திரைப்பட இயக்குனர் உதயகுமார், நடிகர்கள் அனுமோகன், ரங்கநாதன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். இன்று தி.மு.க. வேட்பாளர் பிரகாசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, ம.தி.மு.க. பொதுச்செயலர் வை.கோ. வரவிருப்பதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சி.பி.எம். சார்பில் டூவீலர் பேரணி பிரச்சாரம் நடந்தது. குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டூவீலரில் பிரச்சாரம் மேற்கொண்டனர். விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் ஆட்சியால், சிறு குறு விசைத்தறி தொழில் கூடங்கள் குமாரபாளையத்தில் அதிகம் மூடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும், தொடர்ந்து ஜவுளி தொழிலை மத்திய அரசு கண்டு கொள்ளாததால், குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி தொழிலே முழுமையாக அழியும் நிலை ஏற்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம் என துண்டு பிரசுரங்களை வழங்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.
இதில் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், குமாரபாளையம் நகர செயலாளர் சக்திவேல், நகர குழு உறுப்பினர்கள் உறுப்பினர்கள் கந்தசாமி, காளியப்பன், சரவணன் ,சண்முகம், மாதேஷ், கிளைச் செயலாளர்கள் மோகன், குமார், பாலச்சந்தர், விசைத்தறி சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.